நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார் பார்வதிபாலன்.

ஏனென்றால்… சிவ-பார்வதியின் மைந்தனாக இவ்வுலகுக்கு இஷ்டப்பட்டு வந்தவராயிற்றே பாலமுருகன்! சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.

இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது. தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.

மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடவேண்டும். வெல்லத்தாலான மோதகத்தை நிவேதனம் செய்வது விசேஷம்.

இந்த ஆறு நாட்களிலும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களைப் படித்தல், கேட்டல் மிகவும் நல்லது. இதனால் வீட்டில் உள்ள தீயசக்திகள் அகலும். சுபிட்சம் குடிகொள்ளும். ஆறாம் நாள் கந்தசஷ்டியன்று முழு உபவாசமிருந்து, பூஜைகள் செய்து, ஏழாம் நாள் காலை அன்னதானம் செய்து, விரதத்தை முடிக்க வேண்டும்.

ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம். கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.-

Von Admin